ஆம்பூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு, 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு எதிரே பயணிகள் அமருவதற்காக நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் நடந்து செல்ல தேவையான இடமும் கடையை யொட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களை சிலர் ஆக்கிரமித்து பெட்டிக்கடைகளை வைத்துள்ளனர். இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஆம்பூர் பேருந்து நிலையத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகளும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகளால் ஆம்பூர் நகர் பகுதியில் எந்த நேரமும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூர், தருமபுரி, சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், அங்கிருந்து வேலூர் வரும் பேருந்துகளும் ஆம்பூர் நகருக்குள் நுழைந்து விட்டால் நகரை விட்டு வெளியேற குறைந்தபட்சம் 20 நிமிடங்களாகிறது.
அந்த அளவுக்கு வாகன நெரிசல் ஆம்பூரில் அதிகமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல, ஆம்பூர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் ஆம்பூர் பேருந்து நிலையத்துக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
சாதாரண பேருந்து முதல் விரைவு பேருந்துகள் வரை நெடுஞ்சாலையில் நிற்பதால் பெரும்பாலான நேரங்களில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆம்பூர் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வந்து தான் வெளியேற வேண்டும் என போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் நகர காவல் துறையினர் அறிவுறுத்தியும் பேருந்து ஓட்டுநர்கள் இதனை பின்பற்றாததால் ஆம்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில், பேருந்து நிலையத்தின் உள்ளே அதிக அளவில் பெட்டிக்கடைகள் உள்ளன. அந்த கடைக்காரர்களின் இரு சக்கர வாகனங்களும் பயணிகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் எளிதாக சென்று வர முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும், பெட்டிக்கடையின் உள்ளே சிலர் இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்துவதையும், கஞ்சா புகைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற அநாகரீக செயல்களால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஆம்பூர் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வரும் பாதை மற்றும் வெளியே செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை கடந்து வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே, ஆம்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகமும், காவல் துறையினரும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இது குறித்து ஆம்பூர் போக்குவரத்து காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘‘ ஆம்பூர் மையப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இட நெருக்கடி உள்ளது. விரைவில் அப்பணிகள் முடிவுக்கு வந்தவுடன் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அத்துமீறி பேருந்து நிலையத்துக்குள் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.