பல்லாவரம்: பல்லாவரம் சந்தை ரோடு தொடங்கி, குன்றத்துார் சாலை வரை கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்களை பல்லாவரம் சந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலைகளுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸாரும் நெடுஞ்சாலைத் துறையும் செய்யவில்லை.
பல்லாவரம் இந்திரா காந்தி சாலையிலிருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து தாம்பரம் செல்லவும் ஜிஎஸ்டி சாலையிலிருந்து இந்திரா காந்தி சாலைக்குள் நுழையவும் முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், பல்லாவரம் தபால் நிலையம் முன் பேருந்து நிறுத்தம் செல்வதற்கான சாலையை கடக்கும் இடத்தில் நடைபாதையும் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்களும், மாணவ-மாணவியரும் சாலையை கடக்க முடியாமல் சந்தை சாலை - ஜிஎஸ்டி சாலை மற்றும் திருநீர்மலை பிரதான சாலைகளுக்கு 1.5 கி.மீ. துாரம்வரை சுற்றிச் செல்கின்றனர். சிலர் தடுப்புகளுக்குள் புகுந்து செல்கின்றனர். இது ஒரு புறமிருக்க, பல்லாவரம் கண்டோன் மென்ட், ரங்கநாதன் தெரு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் சாலைகளை இணைக்கும் சுரங்கப்பாதை பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்து கிடக்கிறது.
போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் மெத்தனத்தால், பல்லாவரம் கண்டோன்மென்ட், இந்திரா காந்தி சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் குறைந்ததால் பல்லாவரம், பழைய சந்தை பகுதியில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர் ரோடு - ஜிஎஸ்டி சாலை சந்திப்பு மற்றும் பல்லாவரம் தபால் நிலையம் அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள சாலை தடுப்புகளை நீக்கி, தேவையான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைத்து வழி ஏற்படுத்த வேண்டும் என பலரும் கோருகின்றனர். சிக்னல் அமைக்க உரிய அதிகாரிகளிடம் இருந்து சிக்னல் கிடைக்குமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பல்லாவரத்தை சேர்ந்த காந்தி கூறும்போது, பல்லாவரம், மறைமலை அடிகள் பள்ளி அருகில் சாலை கடப்பதற்கு வசதியாக சிக்னல் அமைக்க வேண்டும் என்றகோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். அதிகாரிகள் முதல், அமைச்சர், எம்எல்ஏ வரைமனுக்களை அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக சிக்னல் அமைக்காமல் காவல் துறையினர் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது என்றார்.
அதிமுகவை சேர்ந்த ஜெய பிரகாஷ் கூறியதாவது: சிக்னல் அமைக்க வேண்டி தாம்பரம் மாநகரக் காவல், போக்குவரத்து துணை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கண்டிப்பாக அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, பல்லாவரம் அரேவா சந்திப்பு மற்றும் இந்திரா காந்தி சாலை சந்திப்பு, சந்தை சந்திப்பு ஆகிய இடங்களில் புதிதாக சிக்னல் அமைக்க போக்குவரத்து போலீஸாருக்கு வங்கி மூலம் கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டது. அவர்கள்தான் சிக்னல் அமைக்க வேண்டும் என்றனர்.
போக்குவரத்து ஆய்வாளர் மணவாளன் கூறும்போது, "பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அகற்றப்பட்ட சிக்னல்களுக்கு பதிலாகபுதிதாக சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் கட்டணம் செலுத்திவிட்டனர். தற்போது சந்தை ரோடு, அரேவா சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.
மேலும், இந்திரா காந்தி சாலை சந்திப்பில் புதிய சிக்னல் ௮மைப்பதற்கான கட்டணத்தை தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல் ஆணையருக்கு செலுத்தாமல், சென்னை மாநகர காவல் துறையினருக்கு செலுத்திவிட்டனர். தற்போது அந்த நிதி மாற்றப்பட்ட பின் டெண்டர் விடப்பட்டு சிக்னல் அமைக்கப்படும்" என்றார்.
இது குறித்து எம்எல்ஏ இ. கருணாநிதி கூறும்போது, இந்திரா காந்தி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத் துறை, காவல்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இதில் அரசியல் ஏதும் இல்லை. முறையாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறும் என போலீஸார் தெரிவித்துள்ளனர் என்றார்.