தமிழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் ஜனநாயக போர்க்களத்தை சந்திப்போம் - திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கருணாநிதி வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காப்போம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆரூரின் ஆழித்தேர் வடிவில் திருவாரூர் காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்தேன். ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிடச் சூரியன் நம் தலைவர் கருணாநிதி. பெரியாரையும் அண்ணாவையும் கொள்கை வழி ஏற்று, அவர்கள் காட்டிய பாதையில் பொதுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர். 13 தேர்தல் களங்களில் தோல்வியே காணாமல் வெற்றிகண்டு, தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவர்.

இந்திய அரசியலின் மூத்த தலைவராக விளங்கியவர். அவரை எதிர்காலத் தலைமுறை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். தளராத முயற்சியுடன், திட்டமிட்ட இலக்கு நோக்கி, அயராது உழைத்தால் எளிய மனிதனும் உயர்ந்த இடத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்கும் திருவாரூரில் உயர்ந்து நிற்கிறது கலைஞர் கோட்டம்.

கடந்த 2018-ம் ஆண்டு கருணாநிதி மறைந்தபின், நானும் எனது சகோதரி செல்வி செல்வமும் அந்த நிலத்தை வாங்கினோம். பின்னர், அதனை தயாளு அம்மாள் அறக்கட்டளைக்குக் கொடுத்தோம். அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன் காமேசுவரன், சம்பத்குமார் இருவரும் கலைஞர் கோட்டத்தை உருவாக்கியுள்ளனர். பலருடைய ஒத்துழைப்புடன் நேற்றைய விழா வெற்றிகரமாக முடிந்தது.

அழைப்பை ஏற்று பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி வந்து பங்கேற்றார். உடல்நலக் குறைவால் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வர இயலாவிட்டாலும், தன் உணர்வுகளை உரையாக எழுதி விளக்கியிருந்தார். கலைஞர் கோட்டத்தை திறக்கும் பெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்த நிலையில், கோட்டத்தை பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கட்சி நிர்வாகிகள் எல்லோரும் கருணாநிதியின் பேராற்றலைக் கண்டு வியந்தனர்.

கோட்டத்தில் கருணாநிதியின் தந்தை முத்துவேலர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அது நூலகமாக மட்டுமில்லாமல், கருணாநிதியின் வாழ்க்கைக்கான ஆவணக் காப்பகமாகவும் திகழும்.

காலத்துக்கேற்ற அறிவியல் வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டவர் கருணாநிதி. பேருந்து முதல் மெட்ரோ ரயில் வரை அவரது திட்டங்கள் தொடர்ந்தன. அவரது கோட்டத்தில் நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள இரு நாற்காலிகளில் ஒன்றில் நாம் அமர்ந்து வணங்கினாலோ, புன்னகைத்தாலோ அந்த நொடியில் எடுக்கப்படும் புகைப்படத்தில், நம் அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பார். ‘ஆகுமென்ட்டட் ரியாலிட்டி’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் விளைவு இது. கருணாநிதியை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர் இக்கோட்டத்துக்கு வந்து அவரது வாழ்க்கை வரலாறு, தொலைநோக்குத் திட்டங்களைத் தெரிந்து கொள்ளலாம். கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் 4 இணையர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்தோம்.

கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் பேசியது போல், இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது.

மதவெறி கொண்ட பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கும். அதற்கான முன்னெடுப்பை பிஹார்முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23-ம் தேதி (நாளை) பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், கருணாநிதியின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டுஉணர்வை, ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. கருணாநிதி வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காப்போம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT