விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய குடியரசுக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் இருவேல்பட்டு குமார் தலைமை தாங்கினார்.
இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆதி திராவிடர் நலப்பள்ளிகளை பொதுக் கல்வித் துறையோடு இணைப்பதை கைவிட வேண்டும். ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு வேலை வாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேல்பாதி கோயில் நுழைவை தடுக்கும் போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "திராவிட மாடல் என கூறிக் கொள்ளும் தமிழக அரசில் 2 ஆண்டுகள் கடந்தும் ஆதி திராவிட மக்களுக்கான எந்த சிறப்பு திட்டமும் இல்லை. அடிப்படை உரிமைகள் கூட காப்பாற்றப்படவில்லை.
இது தொடர்பாக விரைந்து நடவ டிக்கை எடுக்காவிட்டால் தலித் இயக்கங்களை ஒன்றிணைத்து போராடுவோம். 100 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத்தந்த கோயில் பாதுகாப்பு உரிமையை அரசு காப்பாற்றாமல், கோயிலை முடக்கினால் போராட்டத்தை வலுப்படுத்துவோம்" என்றார்.