தூத்துக்குடி: தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் தோழமை அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பத்திரிகையாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் எல்.அலெக்ஸ் வரவேற்றார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் எஸ்.ரதி தேவி பேசியதாவது: 18 வயதுக்கு குறைவான பெண்கள், 21 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிராம அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் ஊராட்சி தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குழந்தை திருமணங்களை தடுக்கும் பணி அனைவரின் கூட்டு முயற்சியாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால், மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் மிக குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 19 குழந்தை திருமண நிகழ்வுகளே பதிவாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 2 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான சம்பவங்களில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குழந்தை திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்களை தடுப்பதில் பத்திரிகையாளர்களின் பங்கு மிக முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து குழந்தை திருமணங்களை முழுமையாக தடுக்க முயற்சி செய்வோம் என்றார் அவர்.
தோழமை அமைப்பின் இயக்குநர் ஏ.தேவ நேயன், மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் ஏ.ஜான் சுரேஷ் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.