தமிழகம்

ஆந்திர போலீஸாரால் குறவர் இன பெண்களுக்கு தொல்லை: நீதி விசாரணை கோரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: ஆந்திர மாநில போலீஸாரால் குறவர் இன பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம் எல் ஏவுமான டில்லிபாவு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியாண்டபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், 7 வயது சிறுவன் உள்ளிட்டோரை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி, ஆட்சியர், எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு குறவர் பழங்குடி சங்கத்தின் மாநில பொருளாளர் வேலு என்பவரை சித்தூர் காவல் நிலையத்துக்கு நாங்கள் அனுப்பி வைத்து, வலுவான சட்டப் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, வேறு வழியின்றி ஆந்திரா போலீஸார் 5 பேரை அனுப்பி வைத்தனர்.

திருட்டு வழக்கில் தேடப்பட்ட ஐயப்பனைக் கைது செய்ததில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், எவ்வித தொடர்பு இல்லாத பெண்கள், சிறுவன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். எனவே, இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்த போலீஸார் மீது எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இப்பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பிரகாஷ், சி.பி.ஐ.எம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT