ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலை கள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவு கள், ரசாயனக் கழிவுகள் பாலாற் றில் கலப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் பாலாற்றின் கரையோரம் நேற்று காலை மீன்கள் கொத்து, கொத்தாக இறந்து மிதப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மழை நீருடன் தோல் கழிவு நீரும் சேர்ந்து பாலாற்றில் கலந்து விடுவதால் பாலாற்றில் மீன்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொது மக்கள் குற்றஞ்சாட்டினர். இதனை கண்டித்து வாணியம்பாடி புறவழிச் சாலையில் இருந்து வடச்சேரி செல்லும் சாலையில் நேற்று காலை பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள் அனைத்தும் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. தோல் கழிவுகள் பாலாற்றில் கலக்கப்படுகிறது. மழை பெய்து, வெள்ள நீர் பாலாற்றில் கலக்கும்போது தோல் கழிவுநீரும் பாலாற்றில் கலக்கிறது. இதனால், பாலாற்றில் அவ்வப்போது மீன்கள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப் பதில்லை. மணல் திருட்டினாலும், குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதாலும் பாலாறு ஏற்கெனவே பாழடைந்துள்ள நிலையில், தற் போது தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுநீரால் பாலாற்று நீரில் வாழும் மீன்கள் இறப்பது பெரும் வேதனையளிக்கிறது.
பாலாறு நீர் விஷத்தன்மையாக மாறியுள்ளது. இந்த நீர் நிலத்தடி நீருடன் கலந்து குடிநீராக பொதுமக்களுக்கும் விநியோகிக் கப்படுகிறது என்பதை அதி காரிகள் உணர வேண்டும். மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பே அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும். பாலாற்றில் கழிவுநீரை கலக்கும் தோல் தொழிற்சாலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும்’’ என்றனர்.
இந்த தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பாலாற்று நீரில் தோல் கழிவுகள் கலந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி, உண்மை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.