மது ஒழிப்பு, பாரத மாதா கோயில் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற குமரி அனந்தனை அவரது ஆதரவாளர்களுடன் போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, முழுமையான மது ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் பாரத மாதா கோயில் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.2-ம் தேதி சென்னையில் இருந்து பாப்பாரப்பட்டி நோக்கி அவர் நடைபயணம் தொடங்கினார்.
சென்னையில் தொடங்கிய நடைபயணத்தை குமரி அனந்தன், 22-வது நாளான நேற்று மாலை பாப்பாரப்பட்டிப் பகுதியில் முடித்தார். மேலும், இன்று (24-ம் தேதி) சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். அதற்காக அனுமதி கேட்டு, காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சிற்றரசு காவல் துறையிடம் கடிதம் அளித்திருந்தார்.
ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீஸார் நேற்று மாலை மறுத்துவிட்டனர். மேலும், பாப்பாரப்பட்டி அடுத்த திருமல்வாடி பகுதியில் தருமபுரி கோட்டாட்சியர், பென்னாகரம் டிஎஸ்பி உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் குமரி அனந்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர், ‘எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அறிவித்தாலோ, கடிதம் வழங்கினாலோ உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுகிறேன். இல்லையெனில், அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும் சுப்பிரமணிய சிவா நினைவிட வளாகத்தில் தனி நபராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வேன்’ என்று கூறினார்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்திற்கு குமரி அனந்தன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். ஆனால், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.