விழுப்புரம் அருகே பிடாகம் கிராமம் அருகே தென்பெண்ணையாற்றில் உள்ள பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 
தமிழகம்

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தென்பெண்ணையாற்று மேம்பாலத்தின் அடிப்புறத்தில் மணல் அரிப்பு

எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: தேசிய நெடுஞ்சாலையான என்எச்-45 சென்னையின் கத்திப்பாரா சந்திப்பில் தொடங்கி பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, பெரம்பலூர், திருச்சி, மணப் பாறை, திண்டுக்கல் நகரங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செல்கிறது.

இந்த தேசிய நெடுஞ்சாலையுடன் சேலம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.68) உளுந்தூர்பேட்டையில் இணைந்து சென்னை வரையும், தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையான (என்.எச்.45 பி) விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் இணைந்து சென்னை வரையிலும் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், விழுப்புரம் அருகே பிடாகம் கிராமம் அருகே ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள ஒரு மேம்பாலம் இந்தப் பயண வழிகளின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய மேம்பாலமாக இந்த மேம்பாலம் உள்ளதால் இந்த மேம் பாலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம்.

ஆனால், அப்படி மேற்கொள் ளவில்லை; அதன் உறுதித்தன்மையை அது படிப்படியாக இழந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பாலத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் ரயில்வே பாலத்தின் தூண்களும் மணல் அரிப்பால் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் மணல் அரிப்பு ஏற்பட்ட கான்கிரீட் தூண்களின் அடிப்பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தடுப்பு நடவடிக்கையை தற்காலிகமாக மேற்கொண்டுள்ளனர். நிரந்தரமாக சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த காலங்களில் பிடாகம் பகுதியில் ஓடும் தென் பெண்ணையாற்றங்கரையில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததே தற்போது அந்த ஆற்றின் வழிச் செல்லும் இரு மேம்பாலங்ளின் தூண் பகுதிகளின் மணல் அரிப்புக்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாவட்ட பொதுப் பணித்துறை அலுவலர்களிடம் இது பற்றி கேட்டதற்கு, “ஏனாதிமங்கலம் மணல் குவாரி இப்பாலத்திற்கு 7 கி.மீ தூரத்தில் மேற்கில் உள்ளது. இக்குவாரி 19.12.2022 அன்று தொடங் கப்பட்டது நெடுஞ்சாலை பாலத்திற்கு 600 மீட்டர் கீழ்புறம் உள்ள தரைமட்ட தடுப்பணைச் சுவர் 2020-ம் ஆண்டு ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் பாலத்தின் சில தூண்களின் அடியில் அத்தூண்களை சுற்றி காபியன் சுவர் (Gabion Wall) அமைக்கப்பட்டது.

மேலும் 2021-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் காரணமாக எல்லீஸ் அணைக்கட்டின் மணல் போக்கி பழுதடைந்தது. இதனால் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக நீரின் போக்கு எல்லீஸ் அணைக்கட்டின் வலதுகரை புறமாகமட்டுமே சென்றதால் எல்லீஸ் அணைக்கட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கும் மாநில நெடுஞ்சாலை போக்குவரத்து சாலை துண்டிக்கப்படாமல் பாதுகாக்கும் வகையிலும் ஆற்றின் வலது கரையை பாதுகாக்கவும் நீர்வளத்துறையால் எல்லீஸ் அணைக்கட்டின் ஒரு பகுதி தகர்க்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இரு பாலங்களின் சில தூண்களின் அடிப்புறத்தில் மீண்டும் மணல் அரிப்பு அதிகம் ஏற்பட்டது. மேலும் ரயில்வே துறையினால் அமைக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட காபியன் சுவர் (Gabion Wall) சரிந்தது. மேற்கண்ட இந்நிகழ்வுகள் அனைத்தும் ஏனாதிமங்கலம் மணல் குவாரி தொடங்குவதற்கு முன்னரே ஏற்பட்டது.

எனவே ஏனாதிமங்கலம் மணல் குவாரியினால்தான் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பது சரியல்ல. ரயில்வே பாலம் மற்றும் நெடுஞ்சாலை பாலங்களின் அடியில் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பிற்கு ஏனாதிமங்கலம் மணல்குவாரி காரணமில்லை. பாலங்களுக்கு 3 கி.மீ தொலைவில் இருபக்கமும் வேறு எந்த மணல்குவாரிகளும் இல்லை.

விழுப்புரம் ஆட்சியரால் தேசிய நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே துறை, நீர்வளத்துறை மற்றும் சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு கோட்டம் உயர் அலுவலர்களைக் கொண்டு இதுபற்றி ஆராய கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மேற்காணும் மணல் அரிப்பின் காரணம் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான தொடர் நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. பாலங்களின் ஸ்திரதன்மை மற்றும் உறுதி பற்றி ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித் தனர்.

இது குறித்து ஆட்சியர் பழனியிடம் கேட்டபோது, “பொதுப்பணித்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர். ரயில்வே துறை, கனிம வளத்துறை இன்னமும் அறிக்கை அளிக்கவில்லை. பாலங்களின் கீழ் பகுதியில் 25 மீட்டர் ஆழம் வரை தூண் உள்ளது. அதில் 3 மீட்டர் வரை மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லீஸ் சத்திரம் தடுப்பணைக் கட்ட உள்ளதால் ஏனாதிமங் கலம் மணல் குவாரியால் இந்த பாலங் களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் குழுஇது குறித்து ஆய்வு செய்ய உள்ளது” என்றார்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் மிக முக்கிய பாலம் இது என்பது நம் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்கு தெரியும். அனைத்து ஆய்வு அறிக்கைகளும் ஒரு சேர கிடைக்கப் பெற்று, மாவட்ட நிர்வாகம் இதில் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

SCROLL FOR NEXT