மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம் சார்பில் இன்று நடந்த மனுக்கொடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றோர். படம்: நா.தங்கரத்தினம். 
தமிழகம்

தமிழ் மொழி பேசும் குறிஞ்சி குறவர்களுக்கு ராஜாக்கூர் குடிசை மாற்று வாரிய வீடுகள் வழங்க கோரிக்கை

சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: தமிழ்மொழி பேசும் குறிஞ்சி குறவர்களுக்கு ராஜாக்கூர் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கக்கோரி குறிஞ்சியர் மக்கள் சனநாயக இயக்கம் சார்பில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு அதன் மாநில தலைவர் விடுதலைநேயன் தலைமை வகித்தார். தலைமைக்குழு உறுப்பினர் பவானி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட நிர்வாகிகள் முத்து காளீஸ்வரி, கீர்த்திகா, சித்ராதேவி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: "மதுரை மாவட்டத்தில் தாய்மொழியான தமிழ்மொழி பேசும் குறிஞ்சி நில குறவர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் ஊசிமணி, பாசிமணி, நரிப்பல் விற்கும் வாகரி மொழி பேசும் நரிக்காரர்கள் அல்லது குருவிக்காரர்கள் வேறு சமூகத்தினராவர்.

ஆனால் தமிழ்மொழி பேசும் எங்களுக்கு சொந்த இடமோ, வீடோ கிடையாது. வீடற்ற நிலையில் கூலித்தொழில் செய்து வருகிறோம். எனவே, எங்களுக்கு ராஜாக்கூரில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரினர்.

SCROLL FOR NEXT