தமிழகம்

ஆண்டிபாளையம் குளத்தில் ஆபத்துகள் களையப்படுமா?

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் அருகே 56 ஏக்கரில் கடல் போல் பரந்து விரிந்து காணப்படுகிறது ஆண்டிபாளையம் குளம். தனியார் அமைப்பின் முயற்சியால் குளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீர் தொடர்ந்து இருந்து வருவதால், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்துக்கு கை கொடுத்து வருகிறது.

அதேபோல் ஆழ்குழாய் குடிநீர் வசதியும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு கைகொடுத்து வருகிறது. கடும் கோடை காலத்திலும் குளத்தில் நீர் வற்றாமல் தேங்கியிருப்பதுதான் ஆண்டிபாளையம் குளத்தின் பெரும் சிறப்பு. தற்போது அறிவியல் மற்றும் மூங்கில் பூங்கா உள்ளிட்டவை அமைத்து அந்த பகுதி திருப்பூர் மாநகர மக்களின் ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்கான ஓர் இடமாக மாறி வருகிறது.

இந்நிலையில், ஆண்டிபாளையம் குளத்தில் போதிய விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் சிறார்கள் பலரும் குளத்து நீரில் நீச்சல் அடித்து வருவது பெற்றோர் பலரையும் பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

குளக்கரையில் எந்த நேரமும் சிறார்கள்ஆங்காங்கே குளித்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறார்களின் பெற்றோர் பனியன் நிறுவனங்களில் வேலை செய்வதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறார்கள் சகவயதினருடன் சேர்ந்து கொண்டு குளிக்கவருகின்றனர். பல ஆண்டு காலமாகதண்ணீர் தேங்குவதால், குளத்தின் எந்த பகுதியில் சேறும், சகதியும் இருக்கும் என யாருக்கும் தெரியாது. இதைஅறியாமல் சிறார்கள் குளத்தில் நீச்சல் பழகுவதை காண முடிகிறது.

கடந்த காலங்களில் இந்த குளத்தில் மதுபோதை நபர்கள் மற்றும் மீன் பிடிக்க வந்த சிறுவர்கள் என பலரும் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. குளத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கவும், எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறும்போது, “படகுசவாரி, நடைபயிற்சிக்கான பணிகள், பழுதடைந்த பூங்காக்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மங்கலம்- சுல்தான்பேட்டை வழியாக வரும் கழிவு நீர், ராஜவாய்க்கால் வழியாக இந்த குளத்தில் கலக்கிறது.

பட்டன் டையிங் தண்ணீரும் குளத்தில் கலக்க வாய்ப்புண்டு. இந்த சமயத்தில் படகு சவாரி செய்யும்போது, துர்நாற்றம் வீசும். ஆகவே கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து குளத்துக்குள்விட வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் உரிய புகார் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆண்டிபாளையம் குளத்தில் குளிக்கும் இடங்களில் பாதுகாப்பு வசதிக்காக, தடுப்பு கம்பி அமைக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT