தமிழகம்

ஓசூர் | சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்ற விவசாயிகள்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைக்க 166 வது நாளாக எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயிகள் இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 - ஊராட்சிகளில் தமிழக அரசு 5-வது சிப்காட் அமைப்பதற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் செய்து வந்தனர்.இவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மேலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வருவாய்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஆனால் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தொடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த விவசாயிகளிடம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதன் பின்னர் போராட்டத்தை கைவிட விவசாயிகள் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறினர்.

இன்று 166 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் திமுக எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும் தங்களது கோரிக்கைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இதனையடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளுக்கு எம்எல்ஏ ஜூஸ் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ "விவசாயிகள் 3 கோரிக்கை வைத்துள்ளனர். அந்த 3 கோரிக்கைகளையும் விரைவில் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதாக கூறினார்" என்றார்.

SCROLL FOR NEXT