வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் 
தமிழகம்

திடீர் கனமழைக்கான காரணம் என்ன? - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

செய்திப்பிரிவு

சென்னை: வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி தான் திடீர் கனமழைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்,"கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளில் பதிவான இரண்டாது அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு அநேக இடங்களிலும், 21 மற்றும் 22ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தமிழக கடற்கரை பகுதிகள், குமரிக்கடல், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும். இந்த மழை வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக பெய்துள்ளது. தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி காற்று சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்து. இதன் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி மெதுவாக நகர்ந்து கொண்டு உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT