சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை 
தமிழகம்

சென்னையில் பருவமழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்  

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சென்னையில் பருவமழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழை காரணமாக, சென்னையில் 127 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும் 6 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னையில் பருவமழை பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி மழை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களில், "சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்கப்பாதைகளை தனி கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். மரங்களை அகற்ற அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளுக்கான வெள்ளோட்டமாக கருதி இந்த மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்." உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

SCROLL FOR NEXT