சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, வரும் 21-ம் தேதி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது.
மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை, கடந்த 14-ம் தேதி அதிகாலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவரது மனைவி கேட்டுக் கொண்டதால், நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 15-ம் தேதி இரவு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்டார். அவருக்கு மூன்று முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது, அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் உறுதியானது.
பின்னர், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக நேற்று முன்தினம் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சையைத் தாங்கும் திறன் இருக்கிறதா என்பதைக் கண்டறிய உடல் தகுதி சோதனையும் நடத்தப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு, வரும் 21-ம் தேதி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது.