சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

ஆளுநர், அண்ணாமலை, நடிகை குஷ்பு குறித்து இழிவான பேச்சு: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர்.

திமுகவின் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் வடசென்னையில் கடந்த இரு தினங்கள் முன்பு நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசியபோது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு ஆகியோர் குறித்து மிகவும் இழிவாகவும், அவதூறு பரப்பு வகையிலும் பேசினார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு தரப்பினரும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, விரைவில் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், திமுக குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

இதற்கிடையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியைவிட்டு நீக்கி திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ வைரலானதையடுத்து, கொடுங்கையூர் காவல் நிலைய போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நேற்று மாலை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT