ஈரோட்டில் நடந்த கொங்கு மண்டல தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். 
தமிழகம்

பாஜக, அதிமுக நிர்வாகிகளை கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஈரோடு: காவல்துறை மூலம் பாஜக, அதிமுக நிர்வாகிகளை கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடுகிறது, என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.

தாமக கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது: எங்கள் கூட்டணிக் கட்சிகளின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாமல், திமுக கூட்டணிக் கட்சிகள் அவதூறு பேசுகின்றன.

காவல்துறை மூலம் பாஜக, அதிமுக நிர்வாகிகளை கைது செய்து, பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வில், இந்திய அளவில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்த நிலையில், அவர்களுக்கு உரிய பாராட்டை திமுக அரசு கொடுக்கவில்லை. அமலாக்கத் துறை வழக்கில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜியை, தியாகியாக சித்தரித்து நிரபராதியாக்க திமுக முயற்சிக்கிறது.

அவர் அமைச்சர் பதவியில் தொடர்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, குற்றவாளியை காப்பாற்றமுயற்சிக்கிறது. நடிகர் விஜய் சொல்லும் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT