தமிழகம்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வீட்டு வசதி மானிய கோரிக்கை தாக்கல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.

தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததையடுத்து, சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 10-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத் தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன.முதல் நாளான இன்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் செய்தி, சிறப்பு திட்ட செயலாக்கம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து, தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள் ளதாகவும் அதற்கு பதிலளிக்க ஆளுங்கட்சி தரப்பில் தயாராக உள்ளதாகவும் தெரிகிறது. கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி, கோட்டை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT