விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட வன அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்,
மாவட்ட மைய நூலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் என 50க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்கிறார்கள்.
இவர்களுக்கென்று இவ்வளாகத்தில் உணவகம் என்றால் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கேண்டீன் மட்டும்தான் செயல்படுகிறது. இங்கு தேனீர் ரூ.8க்கு விற்பனை செய்யப்படுகிறது. கலவை சாதம் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெருந்திட்ட வளாகம் வரும் பொது மக்கள் இங்குதான் பசியாறுகின்றனர். முற்றிலும் லாப நோக்கின்றி செயல்படும் இந்த கேண்டீன் தற்போது மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து கேண்டீனை நிர்வகிக்கும் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தற்போது திங்கள், புதன் கிழமைகளில் மட்டும் ரூ. 65க்கு சிக்கன் பிரியாணி கொடுக்கப்படுகிறது. வறுத்த மீன் துண்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் காலை, நண்பகல், மாலை வரை இந்த கேண்டீன் செயல்படுகிறது.
தினசரி ரூ.15 ஆயிரம் பண மதிப்பில் உணவு பொருள்கள் விற்பனையாகின்றன. இதில் பணியாளர்கள் ஊதியம் போக மீதமுள்ள லாபத்தொகை தனியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வை இந்த லாபம் சரி கட்டுகிறது. மேலும் காவல்துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் வழங்கப்படும் ‘ஸ்னாக்ஸ்’ போன்றவைகள் இந்த லாப தொகையில் நேர் செய்யப்படுகிறது.
பிற மாவட்டத்தில் இருந்து வருபவர்கள், நம் மாவட்டத்தின் போலீஸ் கேண்டீனின் தரத்தை குறிப்பிட்டு பேசுவது எங்களுக்கு பெருமையாக இருக்கும். விரைவில் கூடுதல் உணவுப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். குளிர் சாதன வசதியும் செய்யப்படவும் உள்ளது. அதற்காக ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.