சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை திருவான்மியூர், வேளச்சேரி, கோயம்பேடு, மதுரவாயல், போரூர், அய்யப்பதாங்கல் உள்ளிட்ட இடங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசானது முதல் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சென்னை மாநகர்ப் பகுதிகளில், நேற்று முதலே, ஒருசில இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக, கோயம்பேடு, வானகரம், அரும்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் எழும்பூர், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது. இந்த திடீர் மழையால் சென்னை முழுவதும் குளுமையான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.