தமிழகம்

பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த விரைவில் ஸ்டார் 3.0 திட்டம் - அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது என்று பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டி உள்ளதால் அவர்கள் பதிவுக்காக சார் பதிவாளர் அலுவலகம் வரும்போது பணம் எடுத்து வர வேண்டாம்.

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும்போது அங்கு அவர்கள் பெறும் சேவைக்காக யாராவது லஞ்சம் கேட்டால் இதுகுறித்த புகார்களை பதிவுத்துறை தலைவருக்கு அல்லது பதிவுத்துறை செயலாளருக்கு அனுப்பலாம். இதற்கென தொடர்பு எண்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைவர் பார்வையில்படும்படி எழுதிவைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருதி பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது எதிர்கொள்ளப்படும் சிறு சிறு காலதாமதங்கள்கூட இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்படும். பொதுமக்கள் வழிகாட்டி மதிப்பின்படியான அடிப்படையில் தங்களது சொத்துகளின் மதிப்பை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து, அதற்குரியமுத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT