சென்னை: அடக்குமுறைகளால் எங்களை முடக்க முடியாது. மக்களுக்காக எங்கள் குரல் எப்போதும் ஒலிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த 7-ம் தேதி தனது சமூகவலைதள பக்கங்களில், ‘மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மனித கழிவு கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக தூய்மைப் பணியாளர் இறந்துவிட்டார். இந்த விவகாரத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கள்ள மவுனம் காக்கிறார்,’ என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லாத நிலையில் அவதூறு பரப்புவதாக அளித்த புகாரின் பேரில், எஸ்ஜி சூர்யா நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் எஸ்ஜி சூர்யா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: எஸ்ஜி சூர்யா, இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டை விமர்சித்ததற்காக கைது செய்திருக்கிறார்கள். விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர் கருத்துகள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைதுசெய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.
கருத்து சுதந்திரத்தின் காவலர்கள்போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும். பாஜக தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித் துக்கொண்டிருக்கும்.
தமிழகத்தில் உயிரிழப்பு அதிகம்: 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே உச்சகட்ட உயிரிழப்பு தமிழகத்தில்தான். குற்றம் செய்த பேரூராட்சி உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், கேள்வி எழுப்பியதற்கு எங்கள் மாநிலச் செயலாளரைக் கைது செய்துள்ளனர்.
பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழகத்தைப் பொருத்தவரை, கம்யூனிஸ்ட்கள் திமுகவின் கிளை அலுவலகமாகத்தான் செயல்படுகின்றனர். வியர்வை சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களிடம், பெயரளவில் சமூக நீதி பேசி காலம்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இச்சம்பவத்துக்கு மத்திய அமைச்சர்கள் தேஜஸ்வி சூர்யா, ராஜீவ் சந்திரசேகர், பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதிசீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.