தமிழகம்

பத்திரப் பதிவை 15 நிமிடங்களில் முடிக்க நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: பத்திரப் பதிவை 15 நிமிடங்களில் முடிக்கும் வகையில் கணினிகளின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

பத்திரப் பதிவு அலுவலர்கள் பங்கேற்ற மதுரை மண்டல ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத், ஏஐஜி ராஜ்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சார் பதிவாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்தாண்டு பதிவுத்துறை, வணிக வரித்துறை இணைந்து தமிழக அரசின் மொத்த வருவாயில் 87 சதவீதத்தை ஈட்டியுள்ளன. அதாவது ரூ.1.57 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் இதைவிட கூடுதலாக வருவாய் ஈட்ட, துறை ரீதியாக பல்வேறு ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் அதிகமான சார்பதிவாளர்கள் பங்கேற்றனர். பதிவுத்துறை அலுவலக பணிகள் 100 சதவீதம் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் அனுமதி பெற்று, குறிப்பிட்ட நேரத்துக்கு வந்தால் 15 நிமிடங்களில் பத்திரப்பதிவு செய்துவிடும் அளவுக்கு கணினி செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பதிவுக்காக வரும் மக்கள் கையில் ரொக்கப்பணம் கொண்டுவரத் தேவையில்லை. பதிவுக்கு வரும்போது கையூட்டு என்ற பெயரில் யாரும் பணம் கேட்டால் இதுகுறித்து பதிவுத்துறை அமைச்சர், செயலர், தலைவர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பலாம். புகாரில் உண்மை இருந்தால் உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத்துறை அலுவலக பணிகள் விரைவில் ஸ்டார் 3.0 என்னும் மென்பொருள் மூலம் செயல்படுத்தப்படும்.

இதனால் காலதாமதம் இனிமேல் இருக்காது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பதிவு செய்யும் சார்பதி வாளர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதை முறையாகக் கடைப்பிடிக்கும்படி நினைவூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT