பூந்தமல்லி அடுத்த மாங்காடு பகுதியில் காட்டன் சூதாட்டம் அதிகளவு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அடித்தட்டு ஏழை மக்கள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த மாங்காடு பகுதியில் அதிகளவு காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, டீக்கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் தான் இந்தக் காட்டன் சூதாட்டம் அதிகளவு நடைபெறுகிறது.
பத்து ரூபாய்க்கு லாட்டரி வாங்கினால், ஏழு மடங்கு லாபம் அதாவது, 70 ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சிலர் ஒரு லட்சம் வரை பணம் செலவழித்து லாட்டரி சீட்டுகளை வாங்குகின்றனர். இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பெயர் கூற விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசு லாட்டரி சீட்டுகளை விற்க தடை விதித்துள்ள நிலையிலும், மாங்காடு பகுதியில் குறிப்பாக பட்டூரில் காட்டன் சூதாட்டம் அமோகமாக நடந்து வருகிறது. இதில், கூலி தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் அதிகளவில் பணம் கட்டி ஏமாறுகின்றனர். மாங்காடு பகுதியில் உள்ள ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர்தான், இந்தக் காட்டன் சூதாட்டத்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து, மாங்காடு காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காட்டன் சூதாட்டம் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை வசூல் ஆகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற பணப்புழக்கம் ஏற்படுவது குறித்து, தேர்தல் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, காட்டன் சூதாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து, ஏழை மக்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.