கேரள அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று தமிழ்நாட்டில் தந்தை பெரியார் எழுப்பிய முழக்கத்தை கேரள மாநில அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறது.
கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பிராமணர்கள், மீதமுள்ள பிராமணர் அல்லாதோர் 36 பேர் நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் வகுப்பைச் சேர்ந்தோர் 6 பேர் என்பது சிறப்புக்கு உரியது. கேரள அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம செய்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது வரலாற்றின் வைர வரிகள் ஆகும். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார். அவருக்கு மதிமுக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் நடத்திய கேரளாவில் பெற்ற வெற்றியை, பெரியார் பிறந்த தமிழகத்தில் ஈட்ட முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது.
தந்தை பெரியார் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு படிநிலையாகத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற குரலை எழுப்பினார். அக்கோரிக்கைக்கு செயல் வடிவம் தரும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1970 டிசம்பரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் புரட்சிகரமான சட்டத்தை இயற்றி, இந்தியாவிற்கு வழிகாட்டினார். இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். உச்ச நீதிமன்றம் அப்போது தடை விதிக்கவில்லை என்றாலும் அர்ச்சகர் நியமனத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டு பரிகாரம் தேடலாம் என்று தீர்ப்பில் கூறி இருந்தது. இதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செயல்படாமல் முடங்கிக் கிடந்தது.
மீண்டும் கருணாநிதி ஆட்சியில் 2006 இல் இதற்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சைவ, வைணவ ஆகம பாடங்களில் ஓராண்டு பட்டயம் பெற்ற 207 பேர் அர்ச்சகர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றுவிட்டனர்.
2015 டிசம்பரில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கூறினர். இதிலும் அர்ச்சகர் நியமனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு போட்டால், சட்டப் பரிகாரமே தீர்வு என்றும், சேசம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்குத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டதாக கருணாநிதி கூறினார்.
கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்து, தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.