தமிழகம்

1,000 பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை செயலர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: ரூ.500 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும், 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தார்.

இதையொட்டி, போக்குவரத்துத் துறைத் தலைவர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், ‘‘புதிய பேருந்துகள் கொள்முதலுக்கு ரூ.446 கோடி, பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.

இதைப் பரிசீலித்த அரசு, 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.446.60 கோடி, 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.53.40 கோடி என மொத்தம் ரூ.500 கோடியை ஒதுக்குகிறது. பேருந்து கொள்முதலுக்கான டெண்டர் பணிகளை சாலைப் போக்குவரத்து நிறுவனம் கண்காணிக்கும். மத்திய மோட்டார் வாகன சட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப பேருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT