சென்னை: அதிமுக வழக்கறிஞரும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான இன்பதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: செந்தில் பாலாஜி மீதான வழக்கு, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள வழக்கு.
அவர் மீது அமலாக்கத் துறை குற்றம் சுமத்தி, கைது செய்துள்ளது. இதற்காக முதல்வர் ஏன் பதற்றப்படுகிறார்? அவரை நேரில் சென்று பார்ப்பது ஏன்? முதல்வரின் மகனும், மருமகனும் பார்க்கச் செல்வது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்புகிறார். அது, எதிர்கட்சித் தலைவரின் கடமை.
அதற்குப் பதில் அளிப்பதாகக் கூறி, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஏதேதோ பேசுகிறார். 62 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன் என்கிறார். அதிமுக அடிமை கட்சி என்கிறார்.
அதிமுகவில் இருக்கும்போதுதான் செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என்கிறார். அதற்காகத்தானே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
திமுக ஆட்சியில் அப்போது அமைச்சராக இருந்த என்கேகேபி.ராஜா, அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன், பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
கருணாநிதியின் மகனான ஸ்டாலின், அவரது தந்தை செய்ததைபின்பற்றி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காதது ஏன்? அமைச்சருக்கு என்று தனி சட்டம் எதுவுமில்லை. மொத்தத்தில், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.