திருவாரூர்: திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், வாகன தரச்சான்று உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்பிரமணியனிடமிருந்து கணக்கில் வராத ரூ.3.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.