சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் உயிரிழந்தார்.
அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி, மலை அடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை உறவினர்கள் தோள்களில் தூக்கிச் சென்றுள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
வேலூர் மருத்துவமனையில் இருந்து சாந்தியின் உடல் அவசர ஊர்தியில் எடுத்து வரப்பட்ட போதிலும், சாலை வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டாகியும், மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி கூட செய்து தரப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இது மாநிலத்துக்கு அவமானம். இனியும் இதுபோன நேரிடக் கூடாது.
இனியாவது, அனைத்து மலைக் கிராமங்களுக்கும் சாலைகளை அமைக்க வேண்டும். இதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்து, 6 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.