சென்னை: போதிய வருவாய் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக, 15 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டபாடி, அண்ணாநகர் மேற்கு ஆகிய 2 ரயில்நிலையங்களையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையங்களை திறந்து, ரயில் சேவை தொடங்கினால், வில்லிவாக்கம், பாடி, அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதி மக்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் முக்கியப் பகுதிகளில் ஒன்றாக அண்ணாநகர் உள்ளது. இங்கிருந்து பாடி,வில்லிவாக்கம் வழியாக சென்ட்ரல், சென்னை கடற்கரைக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சென்னை புறநகர் ரயில்வே வலைதளத்தில், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் வில்லிவாக்கத்தில் இருந்து பிரிந்து அண்ணாநகர் மேற்கு, பாடி பகுதிகளுக்குச் செல்லும் ரயில் பாதையில் ரயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டன.
இதையடுத்து பாடி மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் 3.09 கி.மீ. நீள வழித்தடம் கடந்த 2003-ம் ஆண்டு ரூ.7.3 கோடி செலவில் பயணிகள் ரயிலுக்கான வழித்தடமாக மாற்றப்பட்டது. வெறும் 5 மாதங்களில், அந்த வழித்தடத்தில் இருந்த 13 பாலங்கள் புதுப்பிக்கப்பட்டு, சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தட வரைபடத்தில், பாடி மற்றும் அண்ணாநகர் மேற்கு ஆகிய 2 ரயில் நிலையங்கள் இடம்பெற்றன. அப்போது ரயில்வே இணை அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்திஇந்த வழித்தடத்தை திறந்து வைத்தார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக அண்ணாநகர் மேற்கு வரை, நாள் ஒன்றுக்கு 5 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. இதன்பிறகு, பாடிசந்திப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பால பணிகளுக்காக, 2 ரயில் நிலையங்களும் கடந்த2007-ம் ஆண்டு மூடப்பட்டன. பணி முடிந்தபிறகு, அந்த நிலையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு ரயில் சேவை மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இருப்பினும், அந்த முயற்சி கை கூட வில்லை.
அதன்பிறகு, மூடப்பட்ட அந்த 2 ரயில் நிலையங்களும் தற்போதுவரை பெயரளவுக்கு இருக்கின்றன. குறிப்பாக, பாடி ரயில் நிலையம் பராமரிப்பின்றி புதர் மண்டி காட்சி தருகிறது.அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை இயக்கி சோதனை செய்வதற்கும், உதிரி பாகங்களை கொண்டு செல்வதற்கும் அந்த தண்டவாளங்களை ஐ.சி.எஃப். பயன்படுத்தி வருகிறது. மேலும், நடைபயிற்சிக்கு நடைமேடையை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
ரயில் சேவை தேவை
பாடி மற்றும் அண்ணாநகர் மேற்கு ஆகிய ரயில் நிலையங்கள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், சமூகவிரோத செயல்களின் கூடாரமாக திகழ்கிறது. கழிப்பிடமாக சிலர் பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் பயன்பாடு இன்றி உள்ளது. திறப்பு விழா கண்டு வெறும் 4 ஆண்டுகளிலே மூடுவிழா கண்ட பாடி, அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்தசமூக ஆர்வலர் எம்.ஆர். மதியழகன் கூறியதாவது: இந்த இரண்டு நிலையங்களை மூடி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. வில்லிவாக்கத்தில் இருந்து பாடி, அண்ணாநகருக்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லை. பொதுமக்கள் பெரும்பாலும் ஆட்டோவைதான் நம்பிஇருக்கின்றனர். பாடியில் சிட்கோ நகர், சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளும், அண்ணாநகரில் திருநகர், அகஸ்தியநகர் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு இந்த ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு நிலையங்களும் நன்றாகத்தான் இருக்கின்றன. மீண்டும் பராமரிப்பு பணி மேற்கொண்டு, ரயில் சேவை தொடங்க வேண்டும். இதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சமூகஆர்வலர் சு.சேகரன் கூறியதாவது: அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையம் திறந்து,இங்கிருந்து சென்னை கடற்கரைக்கு ரயில்சேவை தொடங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வில்லிவாக்கம், பாடி, அண்ணாநகர் ஆகிய 3 பகுதிகள் சந்திக்கும் இடம்அண்ணாநகர் மேற்கு. இங்கு மக்கள் அடர்த்திஅதிகம். சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். வில்லிவாக்கத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. அரசு, தனியார் பள்ளிகள் உள்ளன. அண்ணாநகர் மேற்கு, பாடியில் இருந்து பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கு ரயில் சேவை உதவியாக இருக்கும். கட்டணம்குறைவு, குறித்த நேரத்தில் செல்ல ரயில்சேவை உதவியாக இருக்கும்.
மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யும்போது, போக்குவரத்து இணைப்புக்கு உதவியாக இருக்கும். எனவே, பாடி, அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையத்தை பராமரித்து ரயில் சேவை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பு இல்லை: இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “பாடி, அண்ணாநகர் மேற்கு ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்சேவை தொடங்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையங்களில் ரயில் சேவைதொடங்கியபோது, மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. குறைந்த வருவாயேகிடைத்தது. மாதத்துக்கு ரூ.15 ஆயிரம் மட்டும் வருவாய் கிடைத்தது. ஆனால், வில்லிவாக்கம்- அண்ணாநகர் இடையே ஒருநாள் ரயில் சேவைக்கு ரூ.30 ஆயிரம் செலவானது. இதையடுத்து, ரயில்சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது, ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்படும் பெட்டிகளை சோதனை மேற்கொள்ளும் இடமாக அண்ணாநகர் மேற்கு ரயில்நிலையம் உள்ளது. இங்கு ஒரு கூடாரம் அமைத்து, புதிய ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டம் செய்யும் இடமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை ஐ.சி.எஃப் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,” அண்ணாநகர் மேற்கு, பாடி ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு இல்லை. ஐ.சி.எஃப் தயாரித்த ரயில் பெட்டிகளை சோதனை மேற்கொள்ள மட்டும் பயன்படுத்தப்படும்" என்றார்.
மீண்டும் ரயில் சத்தம் கேட்குமா?: அண்ணாநகர் மேற்கு ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ரயிலின் சத்தம் கேட்குமா என்பதே அந்த பகுதிவாசிகளின் தீராத ஏக்கமாக இருக்கிறது. ரயில் நிறுத்தப்பட்ட காலத்தில் அந்த பகுதிகள் போதுமான வளர்ச்சியை அடையவில்லை. ஆனால், தற்போது, குடியிருப்பு பகுதிகள் நிறைந்து சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டன.
அதனால் இன்றைய சூழலில் ரயில் சேவை அந்த பகுதிக்கு தேவை என்ற நிலை வந்துவிட்டது. தற்போது, மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. முதல்கட்டம் மெட்ரோ ரயில் திட்டத்தில் அண்ணாநகர் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் வில்லிவாக்கம், கோயம்பேடு சந்தை மெட்ரோ ரயில்நிலையம் இணைக்கிறது. இவற்றுடன் போக்குவரத்து தொடர்பு ஏற்படுத்த, இந்த நிலையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.