மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் குடிநீர் என நினைத்து, ஸ்பிரிட் குடித்த சிறுமிஉயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசா ரிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள கோ. கண்டியன் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி தீபா (32) - ஆனந்தகுமார் (43). இவர்களுக்கு ஆதனா, அகல்யா ஆகிய 2 பெண் குழந்தைகளும், ஆதிஷ் என்ற 2 வயது மகனும் இருந்தனர்.
இந்நிலையில் 8 வயதான அகல்யாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பாதிப்புஏற்பட்டது. புதுவை ஜிப்மர், மற்றும் சென்னை அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 30-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 15 நாட்க ளாக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை சிறுமிக்கு திடீரென உடல்நிலை மோசமானது. அப்போது தாகம் எடுப்பதாக கூறியதால் தாயார் தீபா, படுக்கை அருகில் இருந்த பாட்டிலை எடுத்து கொடுத்துள்ளார். பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த சிறுமி கீழே துப்பி விட்டார். இதைப் பார்த்த செவிலியர் ஒருவர் அது தண்ணீர் அல்ல. மருத்துவப் பயன்பாட்டுக்குரிய ஸ்பிரிட் எனக் கூறினார். இதைக் கேட்ட தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே சிறுமி அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுமி அகல்யா இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், அந்த சிறுமி ஸ்பிரிட் குடித்ததற் கான அறிகுறி தெரிகிறது. ஆனால், இறப்புக்கான காரணம் ஆய்வு முடிவில்தான் தெரிய வரும் என்றார்.