தமிழகம்

இலங்கை பிரச்சினையில் ஐ.மு. அரசின் அணுகுமுறையை பாஜகவும் மேற்கொள்வது சரியா?: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

செய்திப்பிரிவு

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையாண்ட அதே அணுகுமுறையை பாஜக அரசும் மேற்கொள்வது சரிதானா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ், கடந்த 11-ம் தேதி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இலங்கை அரசியல் அமைப்பின் 13-வது சட்டப் பிரிவில் திருத்தம் கொண்டு வருவது பற்றி விவாதித்துள்ளனர். மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே புதிய நகரம் ஒன்றை இலங்கை அரசு அமைக்கவும், அதன்மூலம், 38,500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க் குற்ற விசாரணையை இந்தியா ஆதரிக்குமா என கேட்டபோது, ‘இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் கடந்த மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்கெடுப்புக்கு வந்தது. வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததோடு, இலங்கைக்கு வல்லுநர் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பிரிவை எதிர்த்தே வாக்களித்தது. அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது.

அமைச்சர் கூறியிருப்பது உண்மை எனில், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டையே, இந்த அரசும் கொண்டிருப்பதை உறுதி செய்வதாக உள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையாண்ட அதே அணு குமுறையை தற்போது பாஜக அரசும் மேற்கொள்வது சரிதானா?

தங்கள் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என உலகத் தமிழர்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு மோடி தலைமையிலான அரசால் விடிவு காலம் பிறக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT