திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சாலையோரத்தில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய நகரமாக திருப் புவனம் பேரூராட்சி உள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர் கோயிலுக்கும், அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கும் ஏராள மான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராள மானோர் வருகின்றனர்.
மேலும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்வதற்கான மையப் பகுதியாக திருப்புவனம் உள்ளது. இங்குள்ள அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட பணிமனை மூலம் 45 பேருந்துகள் கிராமங்களுக்கு இயக்கப்படுகின் றன. போக்குவரத்து அதிகம் உள்ள திருப்புவனத்தில் பேருந்து நிலையம் இல்லை.
இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோயில் அருகே செயல்பட்ட பேருந்து நிலையம் சில காரணங் களால் மூடப்பட்டது. அதன் பின்னர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டது. அந்த இடம் சிவகங்கை தேவஸ்தானத்துக்குரியது என கூறப் பட்டதால், அங்கு செயல்பட்ட பேருந்து நிலையம் மூடப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்கு இடத்தில் ரூ.2 கோடியில் பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அது குறுகிய இடம் என எதிர்ப்பு கிளம்பியதால், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மதுரை - ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலை யோரத்தில்தான் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயணிகள் வெயிலில் காத்தி ருக்கும் நிலை உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத் தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது குறித்து பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் கூறியதாவது: ஏற்கெனவே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே செயல்பட்ட இடத்திலேயே பேருந்து நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அந்த இடம் தேவஸ்தானத்துக்கு உரியதாக இருந்தாலும், அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு, அந்த இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டுமென அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.