போடி: போடியில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு நேற்று ரயில் சேவை தொடங்கியது. இதற்காக நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஏராளமான குழந்தைகள் ரயிலை பார்ப்பதற்காக ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
ஒவ்வொருவரும் பெட்டிகளில் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். மதுரை - போடி இடையே இயங்கிய மீட்டர் கேஜ் ரயில் 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. பின்னர் அகல ரயில் பாதை முடிவடைந்து கடந்த ஆண்டு மே 27-ம் தேதியிலிருந்து மதுரை - தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது போடி வரை அகல பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் தேனி வரை வரும் பயணிகள் ரயிலையும், சென்னையிலிருந்து மதுரை வரை வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலையும் போடி வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 2 ரயில் சேவை கிடைத்துள்ளதால் போடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கான தொடக்க விழா நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதற்காக நேற்று பிற்பகல் மதுரைக்குச் செல்லும் பயணிகள் ரயிலம், சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் போடி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் ஊருக்கு ரயில் வந்துள்ளதால் பலரும் ஸ்டேஷனுக்கு வந்து ஆர்வமுடன் ரயில்களை பார்த்தனர்.
குறிப்பாக குழந்தைகள் பலர் பள்ளி முடிந்ததும் தங்களின் பெற்றோருடன் ரயில் நிலையத்துக்கு வந்தனர். பலரும் ரயில் பெட்டிகளில் ஏறி ஓடி விளையாடினர். பெற்றோருடன் ரயில் முன் நின்று மொபைல் போனில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.