தென்காசி: பாளையங்கோட்டை மத்தியச் சிறைக் கைதி இறந்து போனார். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
புளியங்குடி பேருந்து நிலைய பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் தங்கசாமி (26). சட்டவிரோதமாக மதுபாட்டில் களை விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 11-ம் தேதி இவரை புளியங்குடி போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் சிறைக்குள் திடீரென்று மயங்கி விழுந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த தங்கசாமியின் உறவினர்கள் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்து, நேற்று முன்தினம் இரவில் புளியங்குடியிலுள்ள திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி எஸ்பி சாம்சன், கோட்டாட்சியர் கங்காதேவி, டிஎஸ்பி கதிர், புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கசாமியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே தங்கசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால், திருநெல்வேலி 1-வது நீதித்துறை நடுவர் திருமேனி, அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.