மதுரை: "இன்றைக்கு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மீது இருக்கும் அதிருப்தியில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஓர் இடத்தில்கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது. முதல்வரின் நப்பாசை என்னவென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி பிரிந்தால், வாக்குகள் சிதறும் என்று பார்க்கிறார்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக கூட்டணியில் இல்லாமல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், "நேற்றே இது தொடர்பாக சென்னையில் விரிவாக பேசியிருக்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தைப் பொறுத்தவரை புதுச்சேரி உட்பட 40-க்கு 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
இதில், முதல்வரின் ஆசை என்னவென்றால், வாக்குகள் பிரிந்து போகும் என்று பார்க்கிறார். இன்றைக்கு மக்களுக்கு முதல்வர் மீது இருக்கும் அதிருப்தியில், தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது. முதல்வரின் நப்பாசை என்னவென்றால், தேசிய ஜனநாயக கூட்டணி பிரிந்தால், வாக்குகள் சிதறும் என்று பார்க்கிறார். எங்களைப் பொறுத்தவரை, திமுகவின் எதிர்ப்பு வாக்குகள், எங்கள் கட்சியினுடைய வாக்குகள், எங்கள் கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும்" என்றார்.
அப்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அது எப்படி அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாகும்? இன்றைக்கு யாராவது ஒரு சட்ட வல்லுநர், ஒரு சாதாரண மனிதர் செந்தில்பாலாஜி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்று கூறட்டும்? அப்படி யாருமே சொல்லமாட்டார்கள்" என்று அவர் கூறினார்.