தமிழகம்

போலீஸாரின் கண்காணிப்பில் மேலப்பாவூர் - சமூக நல்லிணக்கம் காக்கப்படுமா?

செய்திப்பிரிவு

தென்காசி: தென் மாவட்டங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஜாதிய கலவரங்கள் காவல்துறையின் கடுமையான நடவடிக்கை காரணமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தென்காசி மாவட்டம், மேலப்பாவூரில் ஜாதி மோதல் ஏற்படுவதற்கான புகைச்சல் அதிகரித்து வருகிறது. இதனை ஆரம்பத்திலேயே அணைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து மேலப்பாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசும்போது, “மேலப்பாவூரில் வெவ்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஜாதி பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் சிலர் ஜாதி மோதல்களைத் தூண்டி விடுவதால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பதற்ற நிலை நிலவுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு கோயில் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த ஒரு தலைவரின் படத்தை சிலர் சேதப்படுத்தினர். மேலும், அங்கு அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதால், மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் சம்பவங்களால் மேலப்பாவூரில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டியூஷனுக்குச் சென்ற ஒரு தரப்பு மாணவர்கள் மீது, மற்றொரு தரப்பு இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மீண்டும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அமைதியற்ற நிலை காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜாதி மோதல்களைத் தூண்டி விடுவோர் மீதும், மோதலில் ஈடுபடுவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் விஷமத்தை பரப்புவோரையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர்.

போலீஸார் கருத்து: இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “இரு தரப்பினர் அளித்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே அமைதியை ஏற்படுத்த சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், விளம்பர பதாகை, ஒலிபெருக்கி அமைக்க உரிய துறையிடம் 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். அவரவர் பகுதிக்குள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள வேண்டும்.

பொது நிகழ்ச்சிகளை நடத்த 15 நாட்களுக்கு முன்பு உரிய அனுமதி பெற வேண்டும். ஒரு தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படுவதாக கருதினால் சமூகம் மற்றும் ஜாதிரீதியாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல், தொடர்புடைய அரசுத்துறைகளை அணுகி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாதி மோதலில் ஈடுபடுபவர்கள், மோதலை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

ஜாதிய புகைச்சல்களை ஆரம்பத்திலேயே அணைக்க வேண்டும். பிரச்சினைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT