சென்னை: செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று (வியாழன்) மாலை ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நேற்று பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னர், வரும் 28-ம்தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அவரது நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரை சந்தித்து திமுக அரசுக்கு எதிராக மனு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, செந்தில்பாலாஜி விவகாரங்களை மனுவில் குறிப்பிடுவார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக, திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ம் தேதி பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.