தமிழகம்

நெல்லை | இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரம் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது ரம்மதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள சவேரியார் கோயில் எதிரே 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

இப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை உறிஞ்சி இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி, அங்கிருந்து விநியோகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் பலத்த சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் இருக்கின்றன. தூண்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

ஆபத்தை விளைவிக்க காத்திருக்கும் இந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றவும், புதிய தொட்டி கட்டுவதற்கும் பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் புதிய நீர்த்தேக்கத் தொட்டியைக் கட்டுவதில் சுணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையிலும் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அபாய நிலையிலுள்ள இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் உறுதித் தன்மை குறித்து உடனே ஆய்வு செய்து, புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT