தமிழகம்

மின், மதுவிலக்கு துறைகளை யாருக்கு வழங்குவது? - முதல்வர் தலைமையில் ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வரும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அவருக்கான ஜாமீன் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இதுதவிர, அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மூத்த அமைச்சர்கள், செந்தில்பாலாஜி வகித்து வரும் துறைகளை யாரிடம் பிரித்து வழங்குவதுஎன்பது குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இலாகா இல்லாத அமைச்சர்: அப்போது, செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்துக் கொண்டு, அவர் வகித்த மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியாகும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும், அமைச்சர்களின் விருப்ப அடிப்படையிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT