சென்னை: சென்னையில் ரூ.190 கோடியில் உட்புறச் சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழையின் போது, சேதமடைந்த சாலைகளில் ஜல்லிக் கலவை (Wet Mix Macadam), தார்க்கலவை (Hot Mix) மற்றும் குளிர் தார்க்கலவை (Cold Mix) கொண்டு சீரமைக்கப்பட்டது. தற்போது நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் சாலைப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பருவமழைக்கு பின்பு சாலைப்பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ரூ.190 கோடிக்கு உட்புற சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 268 கி.மீ கொண்ட 1661 உட்புற சாலைகளை 131 கோடி செலவிலும், 34 கி.மீ நீளம் கொண்ட 309 சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை ரூ.35 கோடி செலவிலும், மேலும் 7 கி.மீ நீளம் கொண்ட 124 சாலைகளை ரூ.4.28 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 307 கி.மீ நீளம் கொண்ட 2084 சாலைகளை ரூ.190 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.