தமிழகம்

நியாய விலைக் கடைகளில் கோதுமை நிறுத்தப்பட்டது ஏன்? - விழுப்புரம் மாவட்டத்தினர் கேள்வி

செய்திப்பிரிவு

விழுப்புரம்: “விழுப்புரம் மாவட்ட நியாய விலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக கோதுமை, வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டால் அவர்களும், ‘இது குறித்து எங்களுக்கும் தெரியவில்லை; வரும் பொருளை விநியோகிப்பது மட்டுமே எங்கள் வேலை’ என்கிறார்கள்” என்று நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதிக்கு புகார்கள் வந்தன.

இது தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலக வட்டாரங்களில் கேட்ட போது அளித்த விவரங்கள் வருமாறு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 நியாய விலைக் கடைகள் மூலம் 6,16,089 குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் சர்க்கரை, பருப்புகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியின் இடையில் 4 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு, பின்னர் அது ஒரு கிலோவாக குறைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதுமே ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை பற்றாக்குறைக்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டது தான். எரிவாயு இணைப்பு அதிகம் உள்ள மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விநியோகம் குறைந்ததைத் தொடர்ந்து நியாய விலைக் கடைகளிலும் கோதுமை வழங்கல் குறைந்துள்ளது.

‘இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து, மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட போகிறோம்’ என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரம் பெற விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணியை தொடர்பு கொண்ட போது, அவர் பதிலளிக்க முன்வரவில்லை.

அவரின் நேர்முக உதவியாளர் ஞானத்திடம் கேட்டபோது, “தேவையுள்ள கடைகளுக்கு மட்டும் கோதுமை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார். ‘பற்றாக்குறையை சரி செய்ய 10 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

அவ்வாறு கோதுமை வந்துவிட்டால் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும்’ என்று கடந்த பிப்ரவரி மாதமே கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர் அப்படிச் சொல்லி 3 மாதங்கள் ஆகின்றன. ஆனாலும், நிலைமை மாறவில்லை. தற்போது நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு கோதுமை விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் விநியோகிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT