அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் | கோப்புப் படம் 
தமிழகம்

அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக முதல்வர் நீக்க வேண்டும்: ஜெயக்குமார்

செய்திப்பிரிவு

சென்னை: “டாஸ்மாக் ஊழலால் கிடைத்த பணம் ஒரே குடும்பத்துக்குச் சென்றுள்ளது” என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அதிமுக ஆட்சியின்போது தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையை நியாயப்படுத்திய ஸ்டாலின் இன்று அதனைக் கண்டிக்கிறார். அமலாக்கத் துறை தனது கடமையை செய்யும் நிலையில் அதைத் தடுக்க நினைப்பது ஏன்? சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பது சரியல்ல.

டாஸ்மாக் ஊழல் காரணமாக அரசுக்குக் கிடைக்க வேண்டிய பணம், ஒரு குடும்பத்துக்குச் செல்ல செந்தில்பாலாஜியே காரணம். சட்டவிரோத மதுபான பார்கள் மூலம் ரூ.2,000 கோடி முறைகேடு நடந்துள்ளது. சட்டவிரோத மது விற்பனையால் அரசின் கருவூலத்துக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை உடனடியாக முதல்வர் நீக்க வேண்டும்.

ஒருகாலத்தில் செந்தில்பாலாஜி மீது ஏராளமான புகார் கூறிய மு.க.ஸ்டாலின், தற்போது முதல்வரான பின்னர் அவரைப் பாதுகாக்கிறார். இன்னொருபுறம் சோதனைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய செந்தில்பாலாஜி நெஞ்சு வலிப்பதாகச் சொல்கிறார். உடனடியாக நெஞ்சுவலி எப்படி வரும்? அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கைதாவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?" என்றார்.

முன்னதாக, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் மற்றும் சென்னையில் உள்ள வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT