ஷகில் அக்தர் | கோப்புப்படம் 
தமிழகம்

மாநில தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர்: ஆணையர்களாக தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேரை நியமித்தார் ஆளுநர்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற டிஜிபி முகமது ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கூடுதல் டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்ற பி.தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளின் பொதுத்தகவல் அலுவலர்கள் பதிலளிக்காத பட்சத்தில், மேல்முறையீட்டுக்கான அமைப்பாக மாநில தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 6 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தகவல் ஆணையராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு, விண்ணப்பங்களை பெற்று தனது அறிக்கையை முதல்வரிடம் அளித்தது.

அதன் பேரில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 முறை நடைபெற்றது. இந்நிலையில், தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு, ஓய்வுபெற்ற டிஜிபி முகமது ஷகில் அக்தர்பெயரை ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

பரிந்துரையை பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி. மாநில தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தரை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், காலியாக உள்ள4 தகவல் ஆணையர்கள் பதவியிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர்.பிரியகுமார், ஓய்வுபெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி கே.திருமலைமுத்து, பேராசிரியர் எம்.செல்வராஜ்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை நேற்று ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழக தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முகமது ஷகில்அக்தர், பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1989-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தருமபுரி மாவட்டம் அரூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கிய ஷகில்அக்தர், சென்னை மாநகர காவல்கூடுதல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் சிபிசிஐடி டிஜிபியாக இருந்தபோது ஓய்வு பெற்றார்.

தகவல் ஆணையர்களில் ஒருவரான பி.தாமரைக்கண்ணன், குரூப் 1 அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்து, கடந்த 1993-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி அந்தஸ்தை பெற்றார். சென்னை மாநகர கூடுதல் காவல்ஆணையர், உளவுப்பிரிவு ஐஜி, வடக்கு மண்டல ஐஜி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தாமரைக்கண்ணன், கடந்தாண்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்தபோது ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவருக்கு தற்போது இப்பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் தலைமையில் 2 முறை நடைபெற்றது.

SCROLL FOR NEXT