சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் பழனிசாமி.படம்: ம.பிரபு 
தமிழகம்

அரசியல் அனுபவமில்லாதவர் அண்ணாமலை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும்இல்லாத தலைவர் அண்ணாமலை என அதிமுக மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது.

காலை 11.30 மணியளவில் தொடங்கிய கூட்டம், ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களுக்கு பழனிசாமி பல்வேறுஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம்தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

இத்தீர்மானம் குறித்து மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:

ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவதூறு கருத்தை தெரிவித்துள்ளார். இது,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி மற்றும் தேசியஅளவிலான பல கட்சிகளின் மூத்ததலைவர்கள் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்.

1998-ம் ஆண்டு முதன்முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைய அதிமுக எம்.பி.-க்களை ஆதரவளிக்கச் செய்ததோடு, பாஜகவின் எம்.பி.-க்கள் தமிழகத்தில் வெற்றி பெறுவதற்கும் அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா. அதேபோல், 20ஆண்டு காலமாக தமிழக சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த பாஜகவுக்கு, 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைக்கச் செய்தேன்.

போற்றுதலுக்குரிய தலைவரை பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை, திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு, அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இவ்வாறு பழனிசாமி தெரி வித்தார்.

நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என ஒருமித்த குரலில் தெரிவித்தனர். அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம். கூட்டணியைப் பொறுத்தவரை தேசிய தலைமையிடமே நாம் பேசி வருகிறோம். எனவே, தேர்தலின்போது கூட்டணிகுறித்து முடிவு செய்து கொள்வோம்.அதேநேரம், அண்ணாமலை மீதானபாஜக தலைமையின் நடவடிக்கைக்காக காத்திருப்போம் என பழனிசாமி தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அண்மையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்தபோது, ‘‘கடந்த 1991-1996-ம் ஆண்டுகால கட்டத்தில் மிக மோசமாக ஊழல்நடைபெற்றதை ஒப்புக் கொள்வீர்களா?’’ என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘‘தமிழகத்தின் பல ஆட்சி நிர்வாகங்கள் ஊழல் மிகுந்தவை. இதற்காக முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இதனாலேயே ஊழல் அதிகமாக நடைபெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருக்கிறது. ஊழலில் முதன்மையான மாநிலம் தமிழகம் என்றே நான் கூறுவேன்’’ என அண்ணாமலை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ‘‘எப்போதும், அரசியல் தெரிந்து உண்மையைத்தான் அண்ணாமலை பேசுவார்’’ என குஷ்புவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT