சென்னை: மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ என்ற நிகழ்வில் 884 பேருக்குபணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மத்திய அரசு ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டுமென்று தீர்மானம் இயற்றியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் ‘ரோஜ்கர் மேளா’ என்ற நிகழ்வை நடத்தி வருகிறது. மத்தியநிதி சேவைகள் துறை சார்பில், 6-வது ரோஜ்கர் மேளா நேற்று நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரோஜ்கர் மேளா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், மத்திய நிதி சேவைகள் துறை இயக்குநர் வி.வி.எஸ்.கரயாத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.மதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
பணிநியமன ஆணைகளைப் பெற்றவர்களிடையே பிரதமர்மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 110 பேர், யூனியன் வங்கியில் 39 பேர், அஞ்சல் துறையில் 29 பேர்,ரயில்வேயில் 170 பேர், வருமான வரித் துறையில் 207 பேர், இந்தியன் வங்கியில் 75 பேர், சரக்கு மற்றும் சேவைத் துறையில் 74 பேர் உள்ளிட்ட 884 பேர் பணி நியமன ஆணைகளைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் அஷுதோஷ் சவுத்ரி, சென்னை சுங்கத் துறை முதன்மை ஆணையர் ரவீந்திரநாத், ஜிஎஸ்டி ஆணையர் கே.பாலகிருஷ்ண ராஜு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் மோகன் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.