சென்னை: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ள கிரேனால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழின் ‘உங்கள் குரல்’ சேவையைத் தொடர்பு கொண்டு, சங்கர நாராயணன் என்ற வாசகர் புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த படச்செய்தி வெளியான நிலையில் தற்போது மக்களுக்கு இடையூறாக இருந்த கிரேன் அப்புறப்படுத்தப்பட்டது. அம்பத்தூர் ரயில்நிலையத்தின் இருபுறமும் மார்கெட் அமைந்துள்ளது. இங்கு வரும்பொதுமக்கள் ஒருபுறத்தில் இருந்து மற்றொருபுறத்துக்குச் செல்லரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால், அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதையடுத்து, தற்போது சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக பெரிய கிரேன் ரயில்வே கேட் அருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் நடந்து செல்லவே இடமில்லாமல் நெரிசல் ஏற்பட்டது.
மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் பயணிகள் அவதிப்பட்டனர். ஏதேனும் விபத்துகள் நடப்பதற்குள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாசகர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கிரேனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க மின்விளக்குகள் பொருத்தப்படும் என்றனர்.
கட்டுமான பொருட்களால் இடையூறு: இந்நிலையில் தற்போது கிரேன் அகற்றப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுமக்கள் நடந்து செல்லும் தண்டவாளப்பகுதியின் நடுவே ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்துள்ளனர். இரவு நேரங்களில் வெளிச்சமின்மை காரணமாக பாதசாரிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இவற்றையும் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.