சேலம்: மேல்பாதி கிராம கோயில் பிரச்சினை தொடர்பாக, திருமாவளவன் மீது சேலம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் கார்த்தி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தருமராஜா திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவின் போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த கோயிலுக்கு அரசு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். கோயில் விவகாரம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலவரத்தை விமர்சித்து, சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார். இந்நிலையில், மேல்பாதி கிராம கலவரம் தொடர்பாக அவதூறாக பேசியதாக திருமாவளவன் மீது வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி, சேலத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன், பா.ம.க வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணன், மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.