தமிழகம்

போலியான குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம்: உள்துறை, என்ஐஏ-க்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடிதம்

செய்திப்பிரிவு

தங்கள் இயக்கத்தின் மீதான போலியான குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என வலியுறுத்தியும், இயக்கத்தினுடைய பணிகளை முடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்கள்  மீது நீதியான முறையில் விசாரணை நடத்தி இயக்கத்தின் மீதான போலியான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறக்கோரியும் உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) விடம் பாப்புலர் ஃப்ரண்ட்–ன் தேசிய தலைவர் அபுபக்கர் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "இயக்கத்தின் பணிகளை முடக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் சில சக்திகள் எங்களுக்கு எதிராக அச்சம் மற்றும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற NIA கோப்புகளில் இயக்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம்.

சுகாதார விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி போன்ற சேவைகளை ஊக்குவித்து ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை சக்திபடுத்துவதன் மூலமாக தேசத்தை கட்டமைக்க பல்லாயிரக்கணக்கான  துடிப்பான உறுப்பினர்களையும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் தேசத்திற்கு அர்ப்பணித்து வரும் தேசிய இயக்கமே பாப்புலர் ஃப்ரன்ட்" என்று அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், உளவு நிறுவனங்கள் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்ளவும், நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இத்தகைய விஷயங்களை கவனித்து நேரடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும்  என்று அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT