திருப்பூர்: திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் போதை ஆசாமிகளால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பிரமாண்ட வளாகம், வணிக வளாகங்கள், உணவகங்கள், நகரும் படிக்கட்டுகள் என பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த நவீன வசதிகள் பயணிகளைவிட, மது குடிப்பவர்களுக்கு மிகுந்த பயனுடையதாக அமைந்துவிட்டது என்பதுதான் பொதுமக்களின் வேதனை. பேருந்து நிலையத்துக்குள் எந்நேரமும் வலம்வரும் மதுபோதை ஆசாமிகள், போதை தலைக்கேறிய நிலையில் பேருந்து நிலையத்தில் அரைகுறை ஆடையுடன் படுத்து உறங்கி, புரள்கின்றனர்.
இது தொடர்பாக பயணிகள் கூறியதாவது: திருப்பூர் பேருந்து நிலையத்தில் தினசரி மது போதையில் பலர் தன்னிலை மறந்து படுத்து உறங்குகின்றனர். பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவிகள், பெண்கள் என பலரும் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்களும் இதை கண்டுகொள்ளாததால், போதை நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதோடு, திறந்தவெளி மதுபானக்கூடமாகவும் பேருந்துநிலையம் மாறிவிட்டது.
நள்ளிரவில் வரும் பயணிகளிடம், வழிப்பறி, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களும் அதிகரித்துவிட்டன. பேருந்து நிலைய வளாகத்துக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, தொடர்புடைய போதை நபர்களை பிடித்து போலீஸாரும், மாநகராட்சி பணியாளர்களும் எச்சரிக்கலாம். பேருந்து நிலையத்துக்குள் அடிக்கடி ரோந்துப் பணி மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல பேருந்து நிலையத்துக்குள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், குழந்தைகள் கொண்டுவரும் உணவுப்பண்டங்களை உண்ண அவர்களையே பின்தொடர்ந்து நாய்கள் செல்கின்றன. இதனால் அச்சத்தில் பயந்து ஓடும் பொதுமக்களையும், குழந்தைகளையும் நாய்கள் விரட்டிச் செல்வதால், பலர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. எனவே நாய்களை பிடித்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்விட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.